உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு!.. அமர்க்களம் ரீ ரிலீஸ் ட்ரெயலர் வந்துடுச்சு!..
CineReporters Tamil April 20, 2026 10:48 PM

நடிகர் அஜித் குமார் நடித்த அமர்களம் திரைப்படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் அஜித் குமாரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அமர்க்களம் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில், அமர்க்களம் திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளதால், இப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் வகையில், இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித் குமாருடன் ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்று இன்றும் ரசிகர்களால் நினைவுக்கூறப்படுகின்றன.

இப்படத்தில் அஜித் குமார் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளை கடத்த வேண்டிய நிலை உருவாகிறது. ஆரம்பத்தில் போலியாக தொடங்கும் அந்த உறவு, பின்னர் உண்மையான காதலாக மாறுகிறது. காதல், ஆக்ஷன், பழிவாங்குதல், உணர்ச்சி போன்ற பல அம்சங்களை ஒருங்கிணைத்து கதை நகர்கிறது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு காலத்திலேயே அஜித் குமார் மற்றும் ஷாலினி இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ரசிகர்களிடையே மிகவும் விரும்பப்படும் தம்பதியராக இவர்கள் இன்றளவும் பார்க்கப்படுகின்றனர்.

அமர்க்களம் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. காலத்தை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் இப்படம், இன்றளவும் பலரால் விரும்பி பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், அமர்க்களம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் அனுபவிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திரையரங்குகளில் இந்த படத்தை மீண்டும் காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மே 1ம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு ஒருவாரம் முன்பே அமர்க்களம் படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.