குடும்ப தகராறில் அண்ணன் - அண்ணியை வெட்டிப் படுகொலை செய்த நபரால் மதுரையில் பரபரப்பு !
அருண் சின்னதுரை April 21, 2026 01:44 AM
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் அண்ணன் - அண்ணியை, வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வட மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்த தம்பதி
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர்கள் பழனி - ஈஸ்வரி தம்பதி., வட மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். பழனிக்கும் அவரது தம்பி சுப்பிரமணிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மது போதையில் பழனி வீட்டிற்கு வந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த அவரது அண்ணி ஈஸ்வரியை சரமாறியாக வெட்டி படுகொலை செய்தார். அங்கிருந்து கிராமத்தின் மந்தைக்கு வந்த சுப்பிரமணி அங்கு அமர்ந்திருந்த அவரது அண்ணன் பழனியை வெட்டி படுகொலை செய்தார்.
 
தனது கால் மற்றும் தலை பகுதியில் தனக்கு தானே வெட்டு
 
இருவரையும் வெட்டும் போது தனது கால் மற்றும் தலை பகுதியில் தனக்கு தானே சுப்பிரமணி வெட்டிக் கொண்ட சூழலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.