இசை உலகில் வேகமாக கவனம் பெற்றுவரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது தனித்துவமான இசை பாணி மற்றும் புதுமையான முயற்சிகளால் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு வெளியான “கட்சி சேர” என்ற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான சாய் அபயங்கர், அதனைத் தொடர்ந்து வெளியிட்ட “ஆச கூட” பாடலின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். இந்த பாடல் 150 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்ததுடன், அவருக்கென ஒரு வலுவான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது. தொடர்ந்து, “பென்ஸ்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தற்போது பல திரைப்படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
பென்ஸ் திரைப்படம் இன்னமும் வெளியாகாத நிலையில், அதற்குள் அவருக்கு 8 படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தன. டியூட் படம் தான் அவர் இசையில் வெளியான முதல் படம். அந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்துள்ளன. அடுத்ததாக சூர்யாவின் கருப்பு திரைப்படம் சாய் இசையில் வெளியாக காத்திருக்கிறது. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசை.
இந்நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்ற வதந்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எனக்கு நடிப்பில் போதுமான அனுபவமும் திறமையும் இன்னும் இல்லை. நான் அந்த துறையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. எனவே தற்போது ஏஜிஎஸ் தயாரிக்கும் பெரிய படத்துக்கு நான் இசையமைப்பாளராக மட்டுமே கமிட் ஆகியுள்ளேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பல்வேறு இசை முயற்சிகளுடன் ரசிகர்களை கவர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது திறமை, விடாமுயற்சி மற்றும் புதுமையான அணுகுமுறையால், சாய் அபயங்கர் இசைத்துறையில் வலுவான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறார். அவரது அடுத்தடுத்த வெளியீடுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.