தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது மாலை 7 மணி ஆகிவிட்டது. ஆனால், காலை 12 மணி முதலே அவரை பார்க்க அங்கே பொதுமக்கள் கூடிவிட்டனர். நேரம் செல்ல செல்ல அங்கே கூட்டம் அதிகமாகி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடிவிட்டனர். விஜயின் வாகனம் கூட்டத்திற்குள் நுழைந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலரும் கீழே விழுந்தனர். அதில் மூச்சுத்திணறி பலரும் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. பலரும் மயக்கமடைந்தனர். கடைசியாக 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விஜயை பார்க்கவே கூட்டம் கூடியதாலும், மிகவும் தாமதமாக அவர் கரூருக்கு வந்ததாலுமே இந்த சம்பவம் நடந்ததாக திமுகவினர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், விஜயோ ஏந்த விளக்கமும் கொடுக்காமல் சைலண்ட் மோடுக்கு போனார். 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்டு ‘ஸ்டாலின் சார்.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க.. நான் வீடு இல்லனா ஆபிஸ்ல இருப்பேன்’ என பேசினார்.
இந்நிலையில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று சென்னை நந்தனத்தில் பேசிய விஜய் ‘கரூர் சம்பவத்தில் என் மீது பழிபோட்டார்கள். இதிலெல்லாம் அரசியல் செய்ய மாட்டோம் என சொல்லிவிட்டு சட்டசபையில் நான் தாமதமாக வந்ததான் இதற்கு காரணம் என்று சொன்னார் ஸ்டாலின் சார்.
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு நான் எவ்வளவு நேரத்தில் சென்றேன் என உங்களுக்கு தெரியுமா? வழியெங்கும் எனக்காக காத்திந்த மக்களை நான் ஒதுக்கி விட்டு செல்ல முடியுமா?.. போலீசார் எனக்கு அனுமதி கொடுத்திருந்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன். உங்கள் மீது தப்பே இல்லையெனில் ஏன் உங்கள் அடிமையை (செந்தில் பாலாஜி) கோவைக்கு அனுப்பினீர்கள்?’ என விஜய் கேள்வி அனுப்பியிருக்கிறார்.