தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 20 நாட்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்) மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ளது.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை 06 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் காரைக்குடியிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர்.
இன்று மாலை 06 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டால் அல்லது பிரசாரம் செய்தால், சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 02 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அத்துடன், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 06 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது என்றும், அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (23-ஆம் தேதி) காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 06 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்து, 23-ஆம் தேதி இரவு வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்டிராங்க் ரூமுக்கு எடுத்து செல்லப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, மே 04-ஆம் தேதி காலை 08 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
.