நடிகர் ஜீவா நடிப்பில் சமிபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ஜீவாவின் கேரியரில் முக்கியமான படத்தில் ஒன்றான கோ வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆனதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரைப்படத் துறையில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் மகனாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தனது சொந்த முயற்சியால் நடிகராக தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அவர் 2003ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ராம் ,ஈ, சிவா மனசுல சக்தி மற்றும் கற்றது தமிழ் போன்ற படங்களில் அவரது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் அவரை திறமையான நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க உதவியது.
ஜீவா தமிழ் மட்டுமின்றி ஹிந்தியில் 83 படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்தது அவரது திறமையை மேலும் வெளிப்படுத்த உதவியது. ஷங்கர் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்திலும் அசத்தினார். சில படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், பிளாக் திரைப்படம் ஜீவாவுக்கு மீண்டும் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. பொங்கலுக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக தலைவர் தம்பி தலைமையில் படம் மாறியது.
இந்நிலையில் ஜீவா தான் நடித்த கோ படம் வெளியாகி 15 ஆண்டுகளானதை குறித்து இந்த நாளில், எனக்கு மிகவும் பிடித்தமான கே.வி.ஆனந்த் சாரை நினைவுகூர்கிறேன். உங்களிடமிருந்து வந்த முதல் தொலைபேசி அழைப்பும் கடைசி செய்தியும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, சார். நீங்கள் அப்போதும், இப்போதும், என்றும் வாழும் ஒரு மேதை. நன்றி, சார். அஷ்வின் மற்றும் மற்றவர்கள் மீது பொழிந்த அன்புக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அயன், கோ, மாற்றான், காப்பான் என வரிசையாக கே.வி. ஆனந்த் இயக்கிய படங்கள் எல்லாமே ஷங்கருக்கு அடுத்த பிரம்மாண்ட படங்களாகவே தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தன. கே.வி. ஆனந்தின் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. ஜீவாவுக்கு முன்பாக சிம்புவை வைத்தே கோ படத்தை இயக்க நினைத்தார். ஆனால், கடைசியில் அந்த பட வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்தது. இந்நிலையில், அதை மறக்காமல் ஜீவா பதிவிட்டுள்ளார்.