மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
TV9 Tamil News April 22, 2026 08:48 PM

மதுரை, ஏப்ரல் 22, 2026: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதுரை திருபுவனம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது பெயரை வழக்கில் இருந்து நீக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு – சிபிஐ விசாரணை:

அதாவது, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், திருபுவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் வெப்பநிலை.. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக்கை..

இந்த நிலையில், சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரிக்கவும், வழக்கு விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் மனு தாக்கல்:

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்கக் கோரி காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அஜித் குமாரை ஆரம்ப கட்ட விசாரணைக்கு பின் வெளியே அனுப்பியதாகவும், பின்னர் சிறப்பு விசாரணைக் குழுவினர் அவரை அழைத்துச் சென்றதாகவும், தேவையின்றி தனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு:

மேலும், “இந்த வழக்கில் தனது பெயரை இணைக்க போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, தனது பெயரை சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, வழக்கு தொடர்பாக சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.