தாமரை மலருக்காக தண்ணீருக்குள் சென்ற தம்பி...! - கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி...!
Seithipunal Tamil April 22, 2026 10:48 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம்கி.

இவருக்கு ஜனதுவிசா என்ற மகளும், நிதிர்ஷன் (5) என்ற மகனும் உள்ளனர்.நேற்று காலை, ஜனதுவிசாவும் அவரது தம்பி நிதிர்ஷனும், பக்கத்து வீட்டை சேர்ந்த தோழி மற்றும் அவரது பாட்டியுடன் அருகிலுள்ள பொன்னியம்மன் கோவில் குளத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப்பூக்களை பறிக்க முயன்ற இருவரும், கவனக்குறைவால் தண்ணீருக்குள் இறங்கி தவறுதலாக ஆழத்தில் சிக்கி மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரிதாபகரமான காட்சியை கண்டு கரையில் இருந்தவர்கள் அலறி உதவி கோரினர். சத்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர், தண்ணீரில் மூழ்கியிருந்த இருவரையும் அவசரமாக மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிறுவன் நிதிர்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உயிர் போராட்டத்தில் உள்ள அவரது அக்காள் ஜனதுவிசாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.