திருவண்ணாமலையில் மாணவி கூட்டு பலாத்காரம்... தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை! 5 நாட்களில் அறிக்கை தர டிஜிபி-க்கு உத்தரவு!
Dinamaalai April 22, 2026 07:48 PM

விடுமுறைக்காகப் பாட்டி வீட்டிற்கு வந்த 16 வயது சிறுமி, சமூக விரோதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழகக் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி, திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இரவு நேரத்தில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி, அருகில் உள்ள தோட்டத்திற்குத் தூக்கிச் சென்ற 8 பேர் கொண்ட கும்பல், அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 3 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் அங்குப் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், தனது 'X' தளத்தில், இந்த ஈவிரக்கமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய மிருகத்தனமான வன்முறை மனித உரிமை மீறலாகும். இதனை ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக டிஜிபி இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அடுத்த 5 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ மற்றும் சட்ட உதவிகளைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.