தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று உற்சாகக் களத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டு, காலை 7 மணியுடன் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை இடையறாத முறையில் நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி, வாக்காளர்களின் ஆர்வம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. நகரம் முதல் கிராமம் வரை, மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை ஆற்றுவதில் தீவிர ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர்.
இந்த சூழலில், “ஒரு வாக்கும் வீணாக கூடாது” என்ற உறுதியுடன், ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுகின்றதாவது,“வாக்காளப் பெருமக்களே, உங்களின் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி வாய்ந்தது.
வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அது உங்கள் பொறுப்பும் ஆகும். எந்த சூழலிலும் வாக்களிக்காமல் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து அமைதியாக வரிசையில் காத்திருந்து, ஒழுங்கை கடைப்பிடித்து, உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
ஜனநாயகத்தின் பலம் மக்கள் பங்கேற்பில்தான் உள்ளது. ஒரு வாக்குகூட தவறவிடாமல் பதிவு செய்து, நமது ஜனநாயகத்தின் உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்” என அதில் தெரிவிக்கப்படுகின்றது.