பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் பரவசம்..!
WEBDUNIA TAMIL May 01, 2026 12:48 PM

மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள், மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை முடித்து தல்லாகுளம் கோயிலை அடைந்தார். அங்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்ட பின், தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றுக்கு அழகர் புறப்பட்டார்.

அதிகாலை 5.48 மணி அளவில், லட்சக்கணக்கான பக்தர்களின் "கோவிந்தா" முழக்கங்களுக்கு இடையே பச்சைப்பட்டு உடுத்தி அழகர் வைகையாற்றில் இறங்கினார். நாட்டில் பசுமை செழிக்கும் என்பதன் அடையாளமாக பச்சை பட்டு உடுத்தி அவர் ஆற்றில் இறங்கியது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. முன்னதாக வைகையாற்றில் அழகரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார்.

தொடர்ந்து அழகர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளியபோது, பக்தர்கள் தண்ணீரை துருத்தி மூலம் பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நாளை சனிக்கிழமை தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் மற்றும் நள்ளிரவு தசாவதார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை அழகர் மீண்டும் மலைக்கோயிலை அடைகிறார்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.