அவதூறு வழக்கு; காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்..!
Seithipunal Tamil May 02, 2026 05:48 AM

அசாம் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா, வெளிநாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு  எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாம் அரசு தலைமை வழக்கறிஞரின் (Advocate General) புகாரின் பேரில், மாநில போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வன் கேரா மீது வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பவன் கேராவுக்கு எதிராக கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

குறித்த உத்தரவை எதிர்த்து பவன் கேரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன்படி குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, பவன் கேராவுக்குச் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

அதாவது, 'குற்றப்பிரிவு காவல் நிலைய வழக்கு எண் 04/2026-இன் கீழ் மேல்முறையீட்டாளர் (பவன் கேரா) கைது செய்யப்படும் பட்சத்தில், அவர் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரி விதிக்கும் நியாயமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவைப்படும்போதும் தகவல் தெரிவிக்கப்படும்போதும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். வழக்கின் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்கும் காலத்தில், அவர் எந்தவொரு சாட்சியத்தையும் பாதிக்கவோ அல்லது சிதைக்கவோ கூடாது. உரிய நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது.

வழக்கின் விசாரணையின்போது கூடுதல் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமென விசாரணை நீதிமன்றம் கருதினால், அவ்வாறு செய்வதற்கு அதற்கு முழு அதிகாரம் (discretion) உண்டு.' என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.