திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 4-வது முறையாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெற்றி வாகை சூடினார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. பதிவான வாக்குகள் 217782 வாக்குகள் அனைத்தும் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டது. 23 சுற்று முடிவில் திமுக வேட்பாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு 87271 வாக்குகளும், தமிழக வெற்றிக்காக வேட்பாளர் அருள் ஆறுமுகம் 85172 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏழுமலை 33809 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட விக்னேஷ் 5930 வாக்குகளும் பெற்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தை விட 2455 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 4 -வது முறையாக வெற்றி வாகை சூடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் செல்வத்திடம் சான்றிதழை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, பேரறிஞர் அண்ணா கூறியது போல மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக தலைவணங்கி ஏற்கிறோம் என குறிப்பிட்டார்.