இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றதும், பதிவு பெற்றதுமான அரசியல் கட்சிகளும், தனிநபர்கள் சுயேட்சைகளாகவும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கினர்.
கடந்த 23.04.2026 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில், சிறப்பு தீவிர திருத்த முறையில் இறுதி செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 85.10 சதவீத வாக்காளர்கள் பங்கேற்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (04.05.2026) காலையில் தொடங்கியது. முடிவுகள் வெளியாகி வருகின்றன.
மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். அதேசமயம் வகுப்புவாத மதவெறி சக்திகளையும், இனவாத, சாதிய சக்திகளையும் மக்கள் நிராகரித்து உள்ளனர். தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதித்து ஏற்கிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்களித்த தமிழக மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.