ஹைதராபாத் நகரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்ப முயன்ற திருடனை, தனது ஆட்டோவால் மோதி கீழே தள்ளிப் பிடித்த ஓட்டுநரின் வீரச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த துணிச்சலைப் பாராட்டி காவல்துறை கௌரவித்துள்ளது.
ஹைதராபாத்தின் பேகம் பஜார் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த முகமது ஜஹீர் என்பவர், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சற்றும் யோசிக்காத அவர், உடனடியாகத் தனது ஆட்டோவை ‘யூ-டர்ன்’ எடுத்து, தப்ப முயன்ற திருடனின் பைக்கின் மீது மோதினார்.
ஆட்டோ மோதிய வேகத்தில் திருடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தான். சுதாரித்துக் கொண்டு மீண்டும் பைக்கை எடுத்துத் தப்ப முயன்றவனை, முகமது ஜஹீர் பாய்ந்து சென்று பிடித்துக்கொண்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்களும் திருடனை மடக்கிப் பிடித்தனர். இந்த மொத்தக் காட்சியும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் திருடனை கைது செய்து, பெண்ணின் நகையை மீட்டனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் குற்றவாளியைப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ஜஹீருக்குப் பொதுமக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். ஹைதராபாத் மாநகரக் காவல்துறை அதிகாரிகள், முகமது ஜஹீரை நேரில் அழைத்து அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். மேலும் “தக்க சமயத்தில் அவர் காட்டிய துணிச்சல் ஒரு பெரும் குற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது” என்று காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.