குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லாஜ்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 கைதிகள், தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர்.
கடும் குற்றங்களான கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்கள், இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
சிறைத்துறை அதிகாரிகள் வழங்கிய தொடர் ஊக்கமும், கல்வி பயில அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த வசதிகளுமே கைதிகளின் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தவறு செய்து சிறைக்கு வந்தாலும், கல்வி அறிவின் மூலம் நல்வழிக்குத் திரும்ப முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.