பேரறிவாளனை வழக்கறிஞராக பதிந்ததற்கு எதிரான வழக்கில் பார் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Top Tamil News May 07, 2026 01:48 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்ததை நிறுத்திவைக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். அவரது பதிவை நிறுத்தி வைத்து நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதிக்க கூடாது என பார் கவுன்சிலுக்கு உத்தரவிட கோரி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி ராஜா என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வழக்கறிஞர் சட்டத்தில் கொலை கொள்ளை போன்ற  வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது வழக்கறிஞர் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர், பேரறிவாளனை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யவில்லை என்பதால் வழக்கறிஞர் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்யும் தகுதியை இழக்கிறார் என்று சுட்டிக்காட்டி வாதிட்டார். இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி இந்திய பார் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.