சென்னை ராயபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 'ராயபுரம்' விஜய் தாமு, தனது வெற்றியைக் கொண்டாடிய விதம் தற்போது பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தாமு, தனது வெற்றியையும் பிறந்தநாளையும் ஒரே நேரத்தில் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாடினார். அப்போது, சுமார் 2 அடி நீளமுள்ள பெரிய வீரவாளைப் பயன்படுத்தி அவர் கேக் வெட்டியுள்ளார். இந்தக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
View this post on InstagramA post shared by Sun News Tamil (@sunnews)
பொது இடங்களில் அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். "ஆயுதங்களைக் கொண்டு கேக் வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படும்" எனச் சென்னை மாநகரக் காவல் துறை ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க உள்ள ஒருவரே, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதத்தைக் கையாண்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, விஜய் தாமுவைக் கைது செய்யக் கோரி காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் குவிந்து வருகின்றன.

ஆளுநர் மாளிகையில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி தவெக தலைவர் விஜய் காத்திருக்கும் வேளையில், அவரது கட்சியின் புதிய எம்.எல்.ஏ ஒருவரின் இத்தகைய செயல் கட்சிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.