காலத்தின் கட்டாயம்.. மாநிலத்தின் நலனுக்காகவே தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் விளக்கம்
TV9 Tamil News May 07, 2026 05:48 PM

மே 7, 2026: தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஏன் ஆதரவு அளித்தது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றி கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.

முற்றிலும் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்:

குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறானது. மேலும், ‘முதுகில் குத்திவிட்டது’ போன்ற குற்றச்சாட்டுகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவு:

ஜனநாயக நாட்டில் மக்கள் எண்ணங்கள் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளை வழங்குகின்றன. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்கு தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மேலும் படிக்க: தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்துகு பெரிய சேதமாகும்.. மநீம தலைவர் கமல்ஹாசன்!

தமிழக வெற்றி கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜரை தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காக தொடர்ச்சியாக பயணிப்போம் என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி சமூகநீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் கொண்டுள்ளது.

காலத்தின் கட்டாயம் – மாநிலத்தின் நலன்:

ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்த காலத்திலும் காலூன்ற விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து திரள வேண்டும். தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம்.

இதில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூகநீதியை காக்கவும் தனது பயணத்தை தொடரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.