தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளிலேயே, எதிர்க்கட்சியான திமுக தனது ஆக்ரோஷமான அரசியலை தொடங்கியுள்ளது. இது குறித்து பொருளாதார மற்றும் அரசியல் விமர்சகர் ஜே.வி.சி ஸ்ரீராம் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அவரது பதிவில், "எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எந்தவொரு கட்சியும், முதல் நாள் மற்றும் முதல் மணி நேரத்திலிருந்தே எவ்வளவு ஆக்ரோஷமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதற்கு அறிவாலயத்திடம் வந்து டியூஷன் எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவின் இந்த தீவிரமான மற்றும் இடைவிடாத எதிர்ப்பு அரசியல் அணுகுமுறை மற்ற மாநில கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த அதீத எதிர்ப்பு அரசியல் வியூகம் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திரும்புவதற்கு பதில் சாதகமாக திரும்புவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக ஸ்ரீராம் எச்சரிக்கிறார். ஏனெனில், மக்கள் விஜய்யையும் அவரது புதிய அரசியலையும் ஒரு மாற்று சக்தியாகவும், நம்பிக்கையுடனும் பார்க்கிறார்கள். பதவியேற்ற உடனேயே ஒரு புதிய அரசை எவ்வித கால அவகாசமும் கொடுக்காமல் மிக கடுமையாக விமர்சிப்பது, மக்கள் மத்தியில் திமுக மீதான அதிருப்தியையே உருவாக்கும் என அவர் கருதுகிறார்.
இந்த 'ரூத்லெஸ்' பாணி அரசியல் விஜய்யின் மீதான மக்களின் அனுதாபத்தை அதிகரிக்கக்கூடும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.
Edited by Siva