நடிகர் சிவகார்த்திகேயன் பெயரில் மோசடி! பகிரங்க எச்சரிக்கை விடுத்த 'எஸ்கே'...! - சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்...?
Seithipunal Tamil May 10, 2026 08:48 PM

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பல தரமான திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

அந்த வரிசையில் ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’ போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், புதிய முயற்சிகளுக்கான மேடையாகவும் அமைந்தன. தற்போது இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திரைப்பட வாய்ப்பு வழங்கப்படும் என கூறி, வாட்ஸ்‌அப் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுவது இயக்குநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், காஸ்டிங் முகவர்கள் அல்லது வேறு தனிநபர்கள் மூலமாக அல்ல.

திரைப்படம் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் எங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் மட்டுமே வெளியிடப்படும்” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும், “வாட்ஸ்‌அப் செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது போலியான சமூக வலைத்தள கணக்குகள் மூலம் வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ பெயரை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.