17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (மே 10) காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள கருப்பையா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவிப் பிரமாணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களின் வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் மே 12-ம் தேதி காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவையின் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளைச் சட்டப்பேரவைச் செயலகம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.

புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 14-ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.