தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நீடித்து வருவதால், மாநிலம் முழுவதும் மழைச் செயல்பாடுகள் தீவிரமடையும் வாய்ப்பு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல்,தேனி, தென்காசி, விருதுநகர்,ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளையும் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 12-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
13 மற்றும் 14-ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுடன், காவிரி டெல்டா பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர்,நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் சூழல் நிலவக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டிய அளவில் பதிவாகக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.