தமிழக அரசியலில் ஒரு புதிய அரசு அமையும்போது, அதன் தலைவர்கள் எந்தப் பெயரால் உறுதிமொழி ஏற்கிறார்கள் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது அந்த அரசின் கொள்கைப் பிரகடனமாகவும் பார்க்கப்படுகிறது. இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய், 'ஆண்டவன் பெயரால்' உறுதிமொழி ஏற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
அண்ணா தொடங்கிய மாற்றம்:
பிரிட்டிஷ் காலம் முதல் தொடர்ந்த 'ஆண்டவன் மேல் ஆணையிட்டு' என்ற முறையை 1967-ல் முதன்முதலில் மாற்றியவர் பேரறிஞர் அண்ணா. திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையின்படி, அவர் ‘உளச்சான்றின்படி (Conscience) உறுதியளிக்கிறேன்’ என்று பதவியேற்று புதிய மரபைத் தோற்றுவித்தார். அவரைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரும் 'உளமார' அல்லது 'உளப்பூர்வமாக' என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி வந்தனர்.
ஜெயலலிதாவின் மாற்றம்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1991-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் 'ஆண்டவன் பெயரால்' பதவியேற்று திராவிடக் கட்சிகளின் அந்த மரபை உடைத்தார். இருப்பினும், அதே மேடையில் நாவலர் நெடுஞ்செழியன் 'உளமார' எனப் பதவியேற்றது அப்போது பெரும் பேசுபொருளானது. அவருக்குப் பின் வந்த ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரும் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவன் பெயரிலேயே பதவியேற்றனர். ஆனால், 2021-ல் மு.க.ஸ்டாலின் மீண்டும் அண்ணா, கருணாநிதி வழியில் 'உளமார' என்று பதவியேற்றுத் திராவிட மரபை மீட்டெடுத்தார்.
விஜய்யின் நிலைப்பாடு:
தற்போது முதல்வர் விஜய் 'ஆண்டவன் மேல் ஆணையிட்டு' பதவியேற்றிருப்பது, அவர் திராவிடக் கட்சிகளின் 'உளமார' என்ற பாணியிலிருந்து விலகி, ஜெயலலிதா பின்பற்றிய ஆன்மீக நம்பிக்கையிலான உறுதிமொழி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதைக் காட்டுகிறது. "மதச்சார்பற்ற சமூக நீதி" என்று தனது கொள்கையைப் பிரகடனப்படுத்தியிருந்தாலும், பதவியேற்பின் போது அவர் கையாண்ட இந்த முறை, அவர் அனைத்துத் தரப்பு மக்களையும், குறிப்பாக ஆன்மீக நம்பிக்கையுள்ள மக்களையும் அரவணைத்துச் செல்ல விரும்புவதைக் குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.