ஈரான் போரின் எதிரொலி;இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மேலும் அதிகரிக்க கூடும்; RBI ஆளுநர் அதிர்ச்சி தகவல்..!
Seithipunal Tamil May 14, 2026 02:48 AM

அணுவாயுத போட்டி காரணமாக அமெரிக்கா+ இஸ்ரேல் இணைந்து ராணா மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதன் பதிலடியாக தற்போது மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன்  விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் முக்கியமாக இந்த போர் பதற்றம் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்குமானால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மேலும் அதிகரிக்க கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் இந்த விலை உயர்வினால் ஏற்படும் கூடுதல் சுமையை அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தாங்கிக்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த சூழல் நீண்ட காலத்திற்கு நீடிக்குமேயானால், விலை உயர்வினால் ஏற்படும் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் தவிர்க்க முடியாமல் வேறுவழியின்றி நுகர்வோர் மீது சுமத்த வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், கூறியுள்ளார். தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை மாற்றாமலேயே வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க எரிபொருள் நுகர்வைக் குறைக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்த கருத்து பொதுமக்களிடையே எரிபொருள் விலையேற்றம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.