தங்கம் விக்கிற விலையில இப்படியா மறப்பீங்க…? “தங்க செயினை மைதானத்தில் தவறவிட்ட பெத்தேல்”… மீட்டுக் கொடுத்த படிக்கல்… பாராட்டும் ரசிகர்கள்..!!
SeithiSolai Tamil May 14, 2026 04:48 PM

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த சில போட்டிகளில் ரன் எடுக்கத் தவறிய விராட் கோலி, ராய்பூரில் விஸ்வரூபம் எடுத்தார். 60 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐபிஎல் தொடரில் அவரது 9-வது சதமாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். மேலும், அதிக ஐபிஎல் போட்டிகளில் (279) விளையாடிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

ஆர்சிபி இன்னிங்ஸின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தேல், கார்த்திக் தியாகி வீசிய பந்தில் ஆட்டமிழந்தபோது, அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மைதானத்தில் விழுந்தது. அதிர்ச்சியில் அதனை கவனிக்காமல் பெத்தேல் வெளியேற, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அதனை எடுத்து பெத்தேலிடம் ஒப்படைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக, கார்த்திக் தியாகி வீசிய பந்தில் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோவ்மன் பவல் தவறவிட்டார். இந்த ‘லைஃப்’ கோலியை மேலும் அதிரடியாக ஆட வைத்தது. கோலி மற்றும் படிக்கல் (39) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. 193 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி 19.1 ஓவர்களிலேயே எட்டியது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் இளம் வீரர் அங்க்கிருஷ் ரகுவன்ஷி (71) தனது வாழ்நாள் சிறந்த ஸ்கோரைப் பதிவு செய்தார். அவருக்குத் துணையாக ரிங்கு சிங் 49 ரன்கள் எடுக்க, கேகேஆர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி பலமான நிலையில் இருக்க, கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திலேயே நீடிக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.