ஐபிஎல் 2026 ஏலத்தில் மிகக் குறைந்த வயதில் ஒப்பந்தமாகி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங், தற்போது கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ், வைபவ் சூர்யவன்ஷிக்கு விடுத்துள்ள சவால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஸ்டூவர்ட் பிராட் தொகுத்து வழங்கிய ‘For The Love Of Cricket’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது, இந்தச் சிறு வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷியின் திறமை வியக்க வைக்கிறது. ஆனால், டி20 கிரிக்கெட் என்பது ஒரு வீரருக்கு முழுமையான சவால் அல்ல. டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு வீரரின் மனநிலை மற்றும் உடல் வலிமையைச் சோதிக்கும் அசல் களம். வைபவ் சூர்யவன்ஷியை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க விரும்புகிறேன். அங்குதான் அவர் உண்மையான சவால்களைச் சந்திப்பார்.
டிவில்லியர்ஸின் இந்தச் சவால் குறித்து வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனிஷ் ஓஜாவிடம் பிரபல செய்தி நிறுவனம் கருத்து கேட்டது. அதற்கு அவர் ஏபி டிவில்லியர்ஸ் விடுத்துள்ள சவாலை ஏற்றுக்கொள்ளும் முழு தகுதியும் வைபவிடம் உள்ளது. அவர் ஏற்கனவே பீகார் அணிக்காக உள்நாட்டுச் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியுள்ளார். டிவில்லியர்ஸ் சொன்னது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்க வைபவ் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து பந்துகளையும் அடிக்க முயலாமல், தேவையற்ற பந்துகளைத் தவிர்த்து நிதானமாக விளையாடும் கலையை அவர் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் களத்தில் நிற்பதற்கான உடல் தகுதியையும், வலிமையையும் அவர் மேம்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஏற்கனவே பெரிய இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள வைபவ், விரைவில் சர்வதேச டெஸ்ட் அரங்கிலும் தனது முத்திரையைப் பதிப்பார் என அவரது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜாம்பவான் டிவில்லியர்ஸின் இந்த சவால், அந்த இளம் வீரரை அடுத்த கட்டத்திற்குத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.