ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியப் போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரரின் குழந்தையுடன் ஜாலியாக விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்டின் குட்டி மகன், தர்மசாலா மைதானத்தில் தனது தந்தையின் பயிற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு கையில் பேட்டுடன் வந்த ரோஹித் சர்மா, அந்தச் சிறுவனைக் கவர்வதற்காக அங்கிருந்த பெரிய தூண்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ‘கண்ணாமூச்சி’ விளையாடத் தொடங்கினார்.
ரோஹித் சர்மா தூணுக்குப் பின்னால் ஒளிவதைப் பார்த்த அந்தச் சிறுவனும், அதேபோல மற்றொரு தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ரோஹித்தை எட்டிப் பார்த்து விளையாடினான். ஒருவரையொருவர் தேடிப் பிடித்து ஆச்சரியப்படுத்திய இந்த க்யூட் தருணம், அங்கிருந்த சக வீரர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் புன்னகையை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ரோஹித் சர்மா தனது குழந்தைத் தனமான மற்றும் கலகலப்பான பக்கத்தை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “மைதானத்தில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஹிட்மேனா இது? இவருக்குள் இப்படி ஒரு குழந்தை ஒளிந்திருக்கிறதே என கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.