இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, வைபவ் சூர்யவன்ஷியின் இந்தத் தேர்வைக் கொண்டாடும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,
வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சி நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் அவர் எட்டியுள்ள இலக்கு பல காரணங்களுக்காகக் கொண்டாடப்பட வேண்டியது. கடந்த ஆண்டு ஐபிஎல் அறிமுகம் முதல், அண்டர்-19 உலகக்கோப்பையில் அவர் விளாசிய 175 ரன்கள் மற்றும் ‘தொடர் நாயகன்’ விருது வரை, அவரது ஆட்டத்தை ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறது. வைபவிடம் வெற்றிக்கான பசி தெளிவாகத் தெரிகிறது. மைதானத்தில் பயமில்லாமல் ஆடுவது மற்றும் தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்வதில் அவர் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கிறது.
அதேபோல், லக்னோ அணியின் நட்சத்திர வீரர் ஆயுஷ் பதோனியும் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்றுள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கோயங்கா, “ஆயுஷ் பதோனியை இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வைபவ் மற்றும் ஆயுஷ் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். களமிறங்கி நாட்டிற்குப் பெருமை தேடித் தாருங்கள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கையாகப் பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கையில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.