’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
அரூபி May 25, 2026 07:44 PM

சபாநாயகர் அறையில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் சந்திரசேகர், ஜெயகுமார், சத்தியபாமா ஆகிய மூவரும் அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனாவை அவரது அலுவலக அறையில் சந்தித்து நேரடியாக த.வெ.கவில் இணைந்துள்ளனர். இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக ஒரு கட்சியில் இணைவது என்பது அந்த கட்சி அலுவலகத்திலேயே நடைபெறும் நிலையில், த.வெ.க. ஆட்சியில் இணைப்பு விழா தலைமைச் செயலகத்திலேயே நடைபெற்று வருவதாகவும், அரசு அலுவலகமான தலைமைச் செயலகம் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகமாக செயல்பட தொடங்கியுள்ளது தலைமைச் செயலக ஊழியர்கள் முகசுளிக்க வைத்துள்ளது.

திமுக ஆட்சியில் அறிவாலயத்திலேயே இணைப்பு விழா

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு முக்கிய நபர்கள் திமுக இணைந்தவர். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஒபிஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுக இணைந்தபோது அனைவரையும் அறிவாலயம் வரவைத்து, அவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியில் இணைத்துக்கொண்டாரே தவிர, முதலமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தலைமைச் செயலகத்தில் இணைப்பு விழாவை வைக்கவில்லை. ஆனால், த.வெ.க ஆட்சியில் சட்டமன்றத்தின் மாண்பு மீறப்பட்டு வருவதாகவும், மரபுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

தனி நபர் பின்பற்றும் மத பழக்கங்களுக்கும் தலைமைச் செயலகத்தில் இடம்

தலைமைச் செயலகம் என்பது தமிழ்நாடு மக்கள் அனைவருக்குமான இடமாக திகழ வேண்டும். ஆனால், அங்கும் குறிப்பிட்ட மத வழக்கங்கள் பின்பற்றக்கூடாது என்ற வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால்,  இந்திய யூனியன் லீக்கை சேர்ந்த எம்.எல்.ஏ ஷாஜகான் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சர் இருக்கையில் அமரும்போது அங்கு வரவைக்கப்பட்ட இசுலாமிய மதகுரு, தொழுகை செய்து அவரை இருக்கையில் அமர வைத்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற பல தலைமைச் செயலக மரபுகள் மீறப்பட்டு வருவது த.வெ.க. ஆட்சியில் கவலை அளிப்பதாக ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட அரசியல் விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்.

கவனத்தில் சொல்வாரா முதல்வர் விஜய் ?

மக்களுக்கான திட்டங்கள், குறைகளை போக்கும் இடமாக திகழும் தலைமைச் செயலகம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் போல் செயல்படுவதை முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும், கட்சி அலுவலகம் தலைமைச் செயலகத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள பனையூரில் அமைந்திருப்பதால், அங்கு செல்ல முடியாதவர்கள் தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றுகிறார்கள் என்றும் இதனை சரிசெய்ய பனையூரில் இருந்து கட்சி அலுவலகத்தை சென்னையின் மத்திய பகுதியில் திறக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு முதல்வர் விஜய் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.