குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில், ஹர்ஷத் கடியார் என்பவர் பெட்டக இணை காப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி, வங்கியில் இருந்த குப்பைகளை வெளியில் எடுத்துச் செல்வதாகக் கூறி, பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கியின் பணத்திலிருந்து ரூ.8.70 கோடியை அவர் கட்டுகட்டாகத் திருடிச் சென்றுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் பணத்தை எடுத்துச் செல்ல மற்றொரு வங்கி அதிகாரிகள் வந்தபோது தான் இந்த மெகா திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. பெட்டகத்தை ஆய்வு செய்து அதிர்ச்சியடைந்த வங்கி மேனேஜர் உடனே போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வங்கி ஊழியர் ஹர்ஷத் கடியார் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ரூ.2 கோடி மதிப்பில் பங்களா, ரூ.1.40 கோடிக்குச் சொத்துகள் மற்றும் கார் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது.
மேலும், எஞ்சிய பணத்தைக் கிரிப்டோ போன்ற ஆன்லைன் பங்கு வர்த்தகங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். இதுவரை அவரிடமிருந்து ரூ.2.20 கோடி பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.