Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
சுகுமாறன் May 26, 2026 12:14 AM

கன்னட திரையுலகிற்கு இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்றுத் தந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவரது கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டையை நடத்தியது.

ஏமாற்றிய பிரசாந்த் நீல்:

இந்த சூழலில், இவரது புதிய படமான டிராகன் படத்தின் கிளிம்ப்ஸ் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது. ஜுனியர் என்டிஆர் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் கிளிம்ப்ஸிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அதே கேஜிஎஃப் பட செட்டில் கேஜிஎஃப், சலார் படத்தின் சாயலிலே இந்த படமும் இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளனர். ஒரே கதைக்களத்தில் பிரசாந்த் நீலின் அனைத்து படங்களும் இருப்பதாகவே ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஆயுதம், ரத்தம், சண்டை, பில்டப் என ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டில் கதைக்களத்தை பிரசாந்த் நீல் அமைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்:

ஒரே மாதிரியான டெம்ப்ளேட் மற்றும் பாகம் 2க்கான தொடர்ச்சியுடன் படத்தை பிரசாந்த் நீல் முடிப்பது இந்த படத்திலும் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத சூழலில் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படம் ஜுனியர் என்டிஆருக்கு வரவேற்பை பெற்றுத்தருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரைத்த மாவையே அரைத்திருப்பதாகவும், அதே கடை அதே டெய்லர் அதே வாடகை எனவும் விமர்சித்து வருகின்றனர். 

நட்சத்திர பட்டாளம்:

ஜுனியர் என்டிஆரும் இந்த படத்திற்காக மிக கடுமையாக உடலை கட்டமைத்துள்ளார். தனது ஆஸ்தான படக்குழுவுடனே பிரசாந்த் நீல் பணியாற்றியுள்ளார். ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரணவ் ஸ்ரீ பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் - என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஜுனியர் என்டிஆருடன் அனில் கபூர், ருக்மணி, பிஜு மேனன், அசுதோஷ் ராணா, பிரகாஷ் ராஜ், குஷ்பூ என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். 

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ஜுனியர் என்டிஆர் படங்களுக்கு இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அவர் நடித்த தேவாரா படம் பெரிய வெற்றி பெறாத சூழலில், அவர் இந்தியில் வில்லனாக நடித்த வார் 2 படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில், அவர் நடித்துள்ள டிராகன் அவருக்கு வெற்றியைத் தருமா? என்று அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.