கடந்த 2004-ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த இந்து இளம்பெண்ணும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபரும் காதலித்து, சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வாலிபர் மீது போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கடந்த 2008-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அந்த வாலிபருக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து 2009-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில், தற்போது அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம், வாலிபரை முழுமையாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின் போது பேசிய நீதிபதிகள், அந்தப் பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே வாலிபருடன் சென்றுள்ளார் என்பதும், பெற்றோரின் கட்டாயத்தினாலேயே நீதிமன்றத்தில் வாலிபருக்கு எதிராகச் சாட்சியம் அளித்துள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்றனர்.
மேலும், திருமணத்தின் போது பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வாய்ப்புள்ளது என்றும், ஒருவேளை 18 வயதிற்குள் இருந்திருந்தாலும் கூட, அப்போதைய சட்டப்படி மனைவியின் வயது 15-க்கு மேல் இருந்தால் கணவர் மீது வழக்குப் பதிவு செய்ய இடமில்லை என்றும் கூறி அந்தப் புகாரை நீதிமன்றம் நிராகரித்தது.
சமூகப் பிளவுகள் நிறைந்த இந்தச் சமூகத்தில், எல்லைகளை மீறத் துணியும் இளம் காதலர்கள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்காக உயிரையே பணையம் வைக்க வேண்டிய அவலநிலை இன்றும் தொடர்வதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.