தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கடுமையாக விமர்சித்தார். கோவையில் 10 வயது குழந்தையும், விழுப்புரத்தில் 11 வயது குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு எதிராகக் கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தூக்கிலிட வேண்டும் அல்லது என்கவுண்ட்டர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தவெக தலைவர் விஜய் கொண்டு வந்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ பல்லில்லாத அமைப்பாக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சிப்பதை விஜய் கவனிக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவு என்று பேசினால் பெரும்பான்மைமக்களின் ஆதங்கத்தை யார் தீர்ப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, தூத்துக்குடி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஸ்ரீநாத், தூத்துக்குடியைத் துறைமுக நகரமாக மாற்றுவோம் எனக் கூறுவதைக் குறிப்பிட்டு, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்களின் தொகுதி நிலவரத்தையும் மக்களின் பிரச்சினைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு பதவி ஆசை இருப்பதால் உடனடியாக தவெகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்று அமைச்சர் ஆவது இந்த உலகம் உள்ளவரை சாத்தியமில்லை என்றும் விமர்சித்தார். மேலும், திமுக தயவில் வெற்றி பெற்றுவிட்டு, அதிமுக – திமுகஇணைந்து பதவிக்கு வர பாஜக உதவியதாகக் கூறும் மாணிக்கம் தாகூரின் கருத்துக்குத் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்தார்.