காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணமாகி வெறும் 4 மாதங்களே ஆன ஜீவலட்சுமி என்ற 18 வயது இளம் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளி மகளான இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி ஜீவலட்சுமி திடீரென நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக அவரது மாமியார் தரப்பில் இருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த பெற்றோரும் உறவினர்களும், ஜீவலட்சுமியின் உடலில் பலத்த காயங்களும், கழுத்தில் தூக்கில் தொங்கியதற்கான தழும்புகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டும், பெற்றோர் வீட்டை எழுதி வாங்கி வருமாறும் கணவர் குடும்பத்தினர் ஜீவலட்சுமியைத் தொடர்ந்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சாதிப் பெயரைச் சொல்லி அவமதித்ததுடன், கணவர் ஜீவானந்தம், அவரது தம்பி மற்றும் மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பெண்ணின் தாயார் தூசி காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீவலட்சுமியின் உடலைச் செய்யாறு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, நேற்று காலை விசாரணைக்காக வந்த செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகா ஜெயினின் வாகனத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், குற்றவாளிகள் 5 பேரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி மருத்துவமனை வளாகத்தில் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், வரதட்சணை கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்த பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.