9 முறை கட்சி மாறிய மாஜி எம்எல்ஏ.! தவெகவிற்கு பல்டி அடித்த சரவணன்- யார் இவர் தெரியுமா.?
கு. அஜ்மல்கான் May 26, 2026 02:44 PM

தமிழக அரசியலை கலக்கும் டாக்டர் சரவணன்

மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகராக இருப்பவர் தான் டாக்டர் சரவணன். டாக்டரான இவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இதன் மூலம் மதுரை பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாமையும், பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் தன்னை அரசியல்வாதியாக காட்டிக்கொண்டாலும்,  மறுபக்கம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில், அகிலன் என்ற படத்தில் கதாநாயகனாகவும், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், சத்திரியன், மகேஷ்சரண்யா மற்றும் பலர் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். 

டாக்டர் சரவணன் அரசியல் பயணம்

இந்த நிலையில் ஒரு படத்தில் வடிவேலு காமெடி காட்சியில் இருக்கிற கட்சி மேடையில் இருந்து  கொண்டே மாற்று கட்சிக்கு மாறும் தைரியம் எனக்கு மட்டுமே தான் உள்ளது என கூறுவார். அதற்கு போட்டியாக மதுரை டாக்டர் சரவணன் தமிழகத்தில் தாவாத கட்சியே இல்லையென கூறலாம் அந்த அளவிற்கு வருடத்திற்கு ஒரு கட்சி என மாறி மாறி முக்கிய பொறுப்புகளிலும் வகித்தும் வந்துள்ளார். அந்த வகையில், மருத்துவரான இவர் ஆரம்ப காலத்தில் சில பொதுச் சேவைகளை தொகுதியில் செய்து வந்துள்ளார். திமுகவின் தென் மண்டல பொறுப்பாளராக இருந்த மு.க.அழகிரியின் ஆதரவாளராக சில ஆண்டுகள் இருந்துள்ளார். இதனைடுத்து மதிமுகவில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்புகளோடு செயல்பட்டு வந்தார். அங்கு ஏற்பட்ட மோதல் காரணமாக  2015-ம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். 

பாஜக- மதிமுக- திமுக- பாஜக.?

அடுத்தாக 2016ஆம் ஆண்டு அங்கிருந்து எதிர்கட்சியாக இருந்த திமுகவிற்கு பல்டி அடித்த அவர், அப்போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது திமுகவின் மருத்துவ அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார் டாக்டர் சரவணன்,  2017ல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடுத்தாக அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் போஸ் மரணம் அடைந்த நிலையில்,மீண்டும் 2019ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக சரவணன் வெற்றி பெற்றார்.

அதிமுகவிற்கு பல்டி அடித்த சரவணன்

அடுத்தாக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக தனக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்து கொண்ட சரவணன் அங்கிருந்து மீண்டும் பாஜகவிற்கு பல்டி அடித்தார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணி நேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியதோடு மட்டுமில்லாமல், பாஜகவில் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்தார். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், பாஜக சார்பாக நடைபெற்ற பல்வேறு போரட்டங்களிலும் தலைமையேற்று நடத்தி அனைவரையுமை திரும்பி பார்க்கவைத்தார். 

சில நாட்களில் மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சரராக இருந்த  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாக்டர் சரவணன் இரவோடு இரவாக அமைச்சர் பிடிஆரை  சந்தித்து மன்னிப்பு கேட்ட கையோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆளுங்கட்சியில் டாக்டர் சரவணன்

அடுத்தாக திமுகவில் மீண்டும் இணைய காத்திருந்தவருக்கு திமுக தலைவராக இருந்த ஸ்டாலினோ அனுமதி மறுத்தார். இதனால் சில நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமைக்கு தூது விட்டவர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் சரவணன். இதனைடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து நேற்றைய தினம் விலகியவர் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தவெகவில் தன்னை இணைத்துகொண்டுள்ளார். 

மதுரை டாக்டர் சரவணன்,  அவ்வப்போது ஒவ்வொரு கட்சியாக பல்டி அடித்து வரும் நிலையில், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.  இந்த கட்சியில் இன்னும் எத்தனை நாட்கள் நீடிப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர். 

டாக்டர் சரவணன் அரசியல் பயணம் 

  • மருதுபாண்டியர் பேரவை
  • மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளராக திமுகவில் செயல்பட்டார்
  • வைகோ தலைமையில் மதிமுக இணைந்து முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
  • பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
  • மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்
  • எல்.முருகன் தலைமையை ஏற்று பாஜகவிற்கு பல்டி
  • பிடிஆரை சந்தித்த பிறகு திமுக கரை வேஷ்டி அணிந்து திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
  • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
  • தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையுல் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.