இது குதிரை பேரம்ன்னா அப்ப ஓபிஎஸ், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததற்கு என்ன பெயர்.. ஸ்டாலின் பதில் சொல்வாரா..? ஆதவ் அர்ஜனா கேள்வி…!
SeithiSolai Tamil May 26, 2026 03:48 PM

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அமைச்சரான ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்துப் பேசிய அவர், கொளத்தூர் தொகுதியில் தோற்றதில் இருந்தே ஏன் தோற்றோம் என்று தெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகச் சாடினார். சமூக வலைத்தளங்களால் தான் தேர்தலில் தோற்றதாக மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் கூறுவது பொய் என்றும், திமுக-வின் தோல்விக்குச் சபரீசனும், உதயநிதியும்தான் உண்மையான காரணம் என்றும், கடந்த திமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறந்ததே மக்கள் அவர்களை நிராகரிக்கக் காரணம் என்றும் மிகக் காட்டமாகக் குற்றம் சாட்டினார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்காக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் திரைமறைவில் கைகோர்க்க முயன்றதாக ஆதவ் அர்ஜுனா பரபரப்புப் புகாரை முன்வைத்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் இதுவரை பதில் சொல்ல மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க திமுக முயன்றதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாகவே அந்த முயற்சி கைவிடப்பட்டது என்றும் கூறினார். வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி நினைத்ததாகவும், திமுக-வுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால்தான் அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் அணி வெளியே வந்தது என்றும் அவர் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார்.

தவெக குதிரை பேரம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் கூறுவதற்குப் பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா, ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் முன்பு பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை உடைத்து கட்சியில் சேர்த்தால்தான் அது குதிரை பேரம் என்றும், தற்போது அதிமுகவில் இருந்து வந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஜனநாயக முறைப்படியே தவெக-வில் இணைந்துள்ளனர் என்றும் விளக்கமளித்தார். அதிமுக தொண்டர்கள் தற்போது தவெக-வை ஒரு ‘புதிய அதிமுக’-வாகப் பார்ப்பதால், அவர்களைத் தவெக-விற்கு அன்போடு வரவேற்பதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமே அமோக வெற்றி பெறும் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.