பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
குலசேகரன் முனிரத்தினம் June 01, 2026 09:14 AM

Petrol Diesel Cylinder Price: பெட்ரோல், டீசல் மட்டுமின்றி வணிக சிலிண்டரின் புதிய விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களாகவே எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜுன் மாதத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.87-க்கும், ஒரு லிட்டர்  டீசல் ரூ.99.96-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்வதால், காய்கறி உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு

ஜுன் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 46 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 283 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இந்த விலை உயர்வும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் ஒரே அடியாக வணிக சிலிண்டரின் விலை 993 ரூபாய் அதிகரித்து வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து நான்காவது முறையாக வணிக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. மார்ச்சில் 144 ரூபாயும், ஏப்ரலில் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை ஆயிரத்து 383 ரூபாய் அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர் சூழல் காரணமாக வணிக சிலிண்டரை முன்பதிவு செய்தாலும் விரைந்து கிடைக்கவில்லை என கூறி, உணவகங்கள் போன்றவை கடும் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக உணவகங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளன. இந்நிலையில் மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்து இருப்பது பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர்

அதேநேரம், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யபடவில்லை. அதாவது 928.50 ரூபாய்க்கே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 60 ரூபாய் உயர்த்தப்பட்டதிலிருந்து, வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்

முடியாத போர்

அமெரிக்கா - ஈரான் இடையேயான மேற்காசிய போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரண்டு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், எந்தவித சமாதான உடன்படிக்கையும் இதுவரை கையெழுத்தாகவில்லை. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.