இரவு லேட்டாக வந்ததைக் கண்டித்த பெற்றோர்... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
Dinamaalai June 02, 2026 01:48 AM

சேலத்தில் இரவு வீட்டிற்குத் தாமதமாக வந்ததை பெற்றோர் கண்டித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான 25 வயது பெண் இன்ஜினியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டி செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வித்யா (25). இன்ஜினியரிங் முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வித்யா தனது தோழிகளுடன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர், இரவில் அவர் தாமதமாக வீட்டிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், "கோவிலுக்குச் சென்றால் சாமி தரிசனம் செய்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டியதுதானே, ஏன் தாமதமாக வருகிறாய்?" என்று பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.

பெற்றோரின் கண்டிப்பால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வித்யா, தூங்கச் செல்வதாகக் கூறிவிட்டுத் தனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வித்யா அறையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார், வித்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடுமையான மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணங்களோ தோன்றினால், உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 தமிழக அரசின் மாநில சுகாதாரத் துறை உதவி எண்: 104 எண்களைத் தொடர்புகொண்டு இலவசமாக ஆலோசனைகளைப் பெறலாம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.