இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தின் சுமாரான வரவேற்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சக திரைத்துறையினர் இந்த படத்தை ஆதரிக்காததே படத்தின் தோல்விக்கு காரணம் என அவர் இந்த பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதான் நடித்த எல்.ஐ.கே திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து ரூ100 கோடி வசூலை குவித்தன. அந்த வகையில் சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாகிய எல்.ஐ.கே படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் பாடல்கள் , நடிப்பு , ஒளிப்பதிவு என பல அம்சங்கள் பாராட்டுக்களைப் பெற்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதையை அமைக்க இயக்குநர் தவறியதாக விமர்சனங்கள் தெரிவித்தன. இதனால் இப்படம் உலகளவில் ரூ66 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. எல்.ஐ.கே படத்தின் சுமாரான வசூல் குறித்து ஆதங்கம் தெரிவித்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விக்னேஷ் சிவன் இப்படி கூறியுள்ளார் "எல்.ஐ.கே திரைப்படம் பற்றி இணையத்தில் தாங்கள் கண்ட அதீத எதிர்மறை விமர்சனங்களால், திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிவிட்டதாகப் பலர் எனக்குச் செய்தி அனுப்பியுள்ளனர்.
சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களைத் தாங்கி நிற்கின்றன; மற்றவை நிற்பதில்லை. குறிப்பாக சக கலைஞர்களிடம் அல்லது செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு இல்லாத படங்களின் தலைவிதியை முற்றிலுமாக மாற்றிவிடக்கூடும். தங்களின் அறிவையோ அல்லது மேதமைமையை வெளிக்காட்ட எழுதப்பட்ட விமர்சனங்கள், ஒரு படத்தை விமர்சிப்பதை விட அதிகமாகச் செய்கின்றன - அவை பார்வையாளர்களை அந்தப் படத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்து, லட்சியமிக்க திரைப்பட இயக்குநர்களின் கனவுகளை நசுக்கிவிடுகின்றன. 'LIK' படத்தின் வசூல் முடிவை நான் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று, ஒரு ஞானி , ஒரு புகழ்பெற்ற இயக்குநர் , என்னிடம் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது: "ஒரு படத்தோட வெற்றி, அதுக்குள்ள இருக்குறட விட, வேளிய தான் அதிகம இருக்கு."