விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
சிவரஞ்சித் June 01, 2026 01:44 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் வயிற்று வலி கொடுமை தாங்காமல், நான்கரை வயது பெண் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நகரப் பகுதியான வி.ஏ.ஓ. (VAO) நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தெய்வசிகாமணி - வனிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவயரசி (4½ வயது) மற்றும் கவியரசி (4 மாதங்கள்) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். வனிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது முதலே, கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் எடுத்தும் வலி குணமாகவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று வனிதாவின் கணவர் தெய்வசிகாமணி, தனது உறவினர் ஒருவரின் பணிநிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாருமில்லாத நேரத்தைப் பயன்படுத்திய வனிதா, கடுமையான வயிற்று வலி மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

முன்னதாக, தனது மூத்த மகளான நான்கரை வயது சிறுமி சிவயரசியை வனிதா கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தெய்வசிகாமணி, கதவைத் திறந்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். அங்கு மனைவி வனிதா தூக்கில் தொங்கிய நிலையிலும், மூத்த மகள் சிவயரசி சடலமாகவும் கிடந்துள்ளனர். இதற்கிடையே, மற்றொரு அறையில் இருந்த 4 மாதக் கைக்குழந்தை கவியரசி அதிர்ஷ்டவசமாக எந்தவித ஆபத்துமின்றி உயிருடன் மீட்கப்பட்டது.

கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வனிதாவின் தற்கொலைக்கு வயிற்று வலி மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறுகள் உள்ளதா என்ற கோணத்தில் கணவர் தெய்வசிகாமணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளையே கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட இந்த கோரச் சம்பவம் வி.ஏ.ஓ நகர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.