தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தவெக, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தவெகவில் முக்கிய நபராக திகழ்பவர் ஆதவ் அர்ஜூனா, அந்த வகையில் அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளை தவெக பக்கம் இழுப்பதில் ஆதவின் பங்கு அதிகமாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் உள்ளார். இந்த நிலையில், அமைச்சராக இருப்பவர், விளையாட்டுத்துறை சங்கத்தில் பொறுப்பில் இருப்பது சட்ட விதியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக எம்பி இன்பதுரை வெளியிட்டுள்ள பதிவில், விளையாட்டுத் துறை அமைச்சர், கூடைப்பந்து சங்கத்தின் (Basketball Association) தலைவராக நீடிப்பது நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது! 2015-ல் 'BCCI v. Cricket Association of Bihar' என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் மூன்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்தது. 'Conflict of Interest' (நலன் முரண்பாடு) என்ற தலைப்பில் அந்தக் குழு அளித்த அறிக்கையின் முதல் பரிந்துரைகளில் ஒன்றே —அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்பதுதான்! இந்தப் பரிந்துரைகளில் பலவற்றை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது.
"விதிகள் ஏதும் இல்லை" என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இதனை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும்! அத்துடன், SDAT (Sports Development Authority of Tamil Nadu) அமைப்பு 1992-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (SAF Games), நேரு விளையாட்டரங்கம் நவீனப்படுத்தப்பட்டதுடன், நேரு உள்விளையாட்டு அரங்கம் (Nehru Indoor Stadium), மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உள்கட்டமைப்புகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.
மேலும், அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் "விளையாட்டு அரசியல்" செய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்! என இன்பதுரை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.