திருச்சியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஜோசப் விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன், முதலமைச்சரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். "சுயமரியாதை திருமண மேடைகள்தான் திமுகவின் பிரச்சார மேடைகளாகவும், கொள்கை விளக்க மேடைகளாகவும் இருந்து வருகின்றன. தமிழகத்தின் வரலாறு தெரிந்திருந்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அது புரிந்திருக்கும். ஆனால், யாரோ எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்டை மட்டும் படித்துவிட்டுப் பேசினால் வரலாறு எப்படித் தெரியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்தும் அவர் விமர்சித்தார். "வழக்கமாகப் பிரதமரைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர்கள், அதற்குப் பிறகு டெல்லியிலேயே செய்தியாளர்களைச் சந்தித்துச் சந்திப்பின் விவரங்களை விளக்குவதுதான் மரபு. ஆனால், முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. டெல்லியில் செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்வி கேட்க முயன்றபோது கூட, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டுச் சென்றார்" என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்களுக்கான பொறுப்பு இப்போது முதலமைச்சர் விஜய் கைகளில் இருக்கிறது. மக்கள் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சி ஆவதற்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது கையாண்ட அதே யுக்தியைத்தான் இன்றும் அவர் கையாள்கிறார்.
விஜய் இன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பேசினாரா அல்லது தவெக தலைவராகப் பேசினாரா என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் எப்போதும் 'திமுக, திமுக' என்றே பேசிக்கொண்டு இருந்தார் என்றால், இன்று ஆட்சி, அதிகாரம் கையில் வந்த பிறகும் கூட அதேபோலவே புலம்பிக்கொண்டு இருக்கிறார்" என்றார்.
மக்களின் தற்போதைய நிலை குறித்தும், தவெக-வின் செயல்பாடுகள் குறித்தும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்."மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்களைப் பற்றியோ, கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியோ முதலமைச்சர் பேசியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். இன்று மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அதனால்தான் நாங்களும் மக்கள் குரலாகப் பேச ஆரம்பித்திருக்கிறோம்.
தவெக-வின் 'SOFA மாடல்' இன்று சந்தி சிரிக்கிறது. நீங்கள் நடத்துவது அப்பட்டமான, வெளிப்படையான குதிரை பேரம்" என்று அவர் கடுமையாகச் சாடினார்.