ஓடும் ரயிலில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு!
Dinamaalai June 02, 2026 12:48 AM

மதுரையில் இருந்து நெல்லை வழியே செங்கோட்டை சென்ற பயணியர் ரயிலில் திடீரென மயங்கி விழுந்த 65 வயது மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணியளவில் நெல்லை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்ட சக பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக நெல்லை ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மூதாட்டியை மீட்டு, சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி சிவகங்கை மாவட்டம் கீழ்த்தாரை நடுத்தெருவைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின் மனைவி தவமுத்து (65) என்பது கண்டறியப்பட்டது.

மேலும், இவரது மகன் கார்த்திக் என்பவர் மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் தலைமைப் பிரிவுக் காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.