ஜூன் 13, 2026: மேற்கு ஆசியாவில் கடந்த சில நாட்களாக இந்திய கடற்படையினரைச் சேர்ந்த மாலுமிகள் தொடர்பாக பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“எங்கள் கடல் போக்குவரத்து சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை,” என தெரிவித்தார். எம்டி செட்டபெல்லோ கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக அமெரிக்காவிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு இந்தியா கடும் கண்டனம்:“ஓமான் கடற்கரைக்கு அருகே நடந்த கப்பல் தாக்குதலை நாம் கண்டித்தோம். இந்த தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக எங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை அழைத்திருந்தோம். அந்தப் பகுதியில் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலைக்குரியவை.
அங்கு நீடித்து வரும் மோதல்களின் நேரடி விளைவாகவே இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் விரைவில் திரும்புவதற்காக பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை விளக்கக் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜல்வீர் என்ற எண்ணெய் கப்பல் ஓமான் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் அருகே தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த கப்பல் வியாழக்கிழமை அமெரிக்க படையினரால் தாக்கப்பட்டது. கப்பலின் எஞ்சின் அறையை குறிவைத்து இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா விதித்த தடைக்கு பிறகு, இந்த கப்பல் ஈரானின் இரண்டு துறைமுகங்களுக்கு சென்றதுடன், கப்பல்-மாற்று சரக்கு பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கப்பல் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல்:இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வாரத்தில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
ஓமானில் உள்ள இந்திய தூதரகம், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு:வியாழக்கிழமை காலை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், எம்டி செட்டபெல்லோ கப்பல் தாக்குதலுக்கு பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட மூன்று இந்திய பணியாளர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். இந்த உயிரிழப்புகளை “எங்கள் கடல் போக்குவரத்து குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு” என குறிப்பிட்ட அவர், “இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் அரசு உறுதியாக நிற்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்,” என தெரிவித்தார்.