தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூண்டுதலின் பேரில், அதிமுகவை உடைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்று வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைக் குலைக்கும் நோக்கில் சி.வி.சண்முகம் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளின் தோல்விக்குச் சண்முகமே காரணம் என்று சாடிய பசுபதி, தவெகவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் 25 எம்.எல்.ஏ.க்களை அக்கட்சிக்கு அழைத்துச் செல்ல சண்முகம் முயன்றதாகவும், அது பலிக்காததால் தற்போது இபிஎஸ் மீது அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாமக போட்ட பிச்சையால்தான் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாகக் கூறி கட்சித் தொண்டர்களைச் சண்முகம் கொச்சைப்படுத்தியுள்ளார் என்று பசுபதி வேதனை தெரிவித்தார். இபிஎஸ் குடும்ப அரசியல் செய்யவில்லை என்றும், மாறாகச் சண்முகம்தான் தனது அண்ணனை வைத்து விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அரசியல் நடத்தி வந்ததாகச் சாடினார். தவெகவின் கைக்கூலியாக மாறி, அதிமுக நிர்வாகிகளை அக்கட்சிக்கு அனுப்பி வைக்கும் வேலையைச் சண்முகமே செய்து வருவதாகவும், மயிலம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டால் அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்றும் சவால் விடுத்தார். இத்துடன் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசுவதைச் சண்முகம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.