தமிழகத்தில் மின்வெட்டு குறித்து மாஸ்டர் மகேந்திரனின் கருத்து பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மாஸ்டர் மகேந்திரனை பலரும் கடுமையாக திட்டி வந்த நிலையில் தனது கருத்து மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு அமைத்து ஒரு மாத காலம் கடந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பெண்கள் , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் தவெக அரசு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே நேரம் தவெக ஆட்சி ஏற்றப்பின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தொடர் மின்வெட்டுகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை நியாயமான எந்த வித விளக்கமும் வராரது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இதனால் தேர்தலுக்கு முன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தவெகவுக்கும் விஜய்க்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது ஒரு சில படங்களில் நாயகனாகவும் , வில்லனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் யூடியுப் சேனல் ஒன்றில் பேசியபோது தமிழகத்தில் மின்வெட்டு குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் " இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா. இத்தனை நாள் ஜாலியாக இருந்தீர்களா ? 6 மாதத்திற்கு எதுவும் கேட்காதீர்கள். வேண்டுமானால் என் வீட்டில் இருந்து கூட மின்சாரம் எடுத்துக் கொள்ளுங்கள். சோலார் சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது. எனக்கு அதை பயன்படுத்தி மின்சாரம் எடுக்க தெரியும். விஜயிடம் கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா. இன்னும் எத்தனை நாள் தான் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பீர்கள். கேள்வி கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும் ' என மகேந்திரன் பேசியிருந்தார்
மகேந்திரனின் கருத்து பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டது. திமுக ஆட்சியில் கேள்வி கேட்பது நம் உரிமை என்று புரட்சிகரமாக வீடியோ போட்ட இதே மகேந்திரன் இன்று கேள்வி கேட்காதீர்கள் என்று பேசியிருக்கிறார். இதுதான் அவரது உண்மை முகம் என பலர் அவரை விமர்சித்து வந்தார்கள். புதிதாக அவருக்கு சோலார் ஸ்டார் என்றும் நெட்டிசன்கள் பெயர் வைத்துள்ளார்கள். இந்த நிலையில் மகேந்திரன் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். தனது கருத்தை தவறாக புரிந்துகொண்டவர்களே தற்குறி என மகேந்திரன் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தனது கருத்து குறித்து விளக்கமளித்த மகேந்திரன் "நான் பேசுனது முழுசா பாக்காம, ஷார்ட்ஸ்ஸ பாத்துட்டு எதையாவது பரப்ப வேண்டியது. மின்சர தேவை அதிகமா இருக்கு, அதனால சோலார் பயன்படுத்தி இருந்தா இந்த மின்சார பிரச்சனை இருந்து இருக்காதுனு சொன்னேன். கொச்சின் ஏர்போர்ட் முழுக்க முழுக்க சோலார் சிஸ்டத்துல இயங்குது, எங்க சாத்தியம்னா இங்க முடியாதா? நான் பேசுனது தப்பா புரிஞ்சிகிட்டு என்ன தற்குறின்னு திட்றாங்க. அப்போ நான் பேசினது தற்குறித்தனமா? இல்ல தப்பா புரிஞ்சுகிட்டவங்க தற்குறியா? அதனால நான் என் கருத்துல உறுதியா இருக்கேன். அதுல இருந்து பின்வாங்குறதா இல்லை" என்று கூறியுள்ளார்.