பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ‘ஸ்கெலட்டன் பிரிட்ஜ்’ என்ற பாலத்தில், பயிற்சியாளர்களின் அலட்சியத்தால் 21 வயதான மரியா எடுஆர்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற இளம் பெண் 130 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பங்கி ஜம்பிங் விளையாட்டின் போது, பாதுகாப்பு கயிற்றை முதன்மை கயிற்றுடன் இணைக்காமலேயே பயிற்சியாளர்கள் அவரை பாலத்தின் விளிம்பிலிருந்து கீழே தள்ளியதே இந்த கோர விபத்துக்குக் காரணமாகும். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“>
இதனால் சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது. விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்த விடுப்பில் இருந்த செவிலியர் ராய்சா டயாஸ், அந்தப் பெண்ணின் இறுதி நிமிடங்களின் திக் திக் பின்னணியைப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் கீழே விழுந்த பிறகும் சில நிமிடங்கள் உயிருடன் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், சேறும் சகதியுமான செங்குத்தான பாதையில் கயிற்றின் உதவியோடு கைகளில் காயங்கள் ஏற்படுவதையும் பொருட்படுத்தாமல் அடிவாரத்திற்குச் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றதாகத் தெரிவித்தார்.