ஜூன் 16, 2026: மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்க அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலான ‘ஷெட்யூல் K’-இல் இருந்து “இருமலுக்கான சிரப்புகள்” நீக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் விதிகளில் திருத்தம் செய்துள்ளது. ஆனால், இருமலுக்கான லோசன்ஜ்கள், மாத்திரைகள் மற்றும் டேப்லெட்டுகள் தொடர்ந்து அந்தப் பட்டியலில் இடம்பெறும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பங்குதாரர்களின் கருத்துகளை கேட்டிருந்தது. இதற்கான நடவடிக்கை, மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் சிரப் அருந்தியதால் குறைந்தது 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது. அதே சமயம், ராஜஸ்தானிலும் குழந்தைகள் இருமல் சிரப் அருந்தி உயிரிழந்த சம்பவங்கள் பதிவானன. ஆனால் அந்தச் சம்பவத்தில், சிறிய குழந்தைகளுக்காக தயாரிக்கப்படாத சிரப்புகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருமல் மருந்துக்கு கட்டுப்பாடு:இனி, இருமல் ஏற்பட்டால் அருகிலுள்ள மருந்தகத்தில் நேரடியாக சென்று இருமல் சிரப் வாங்க முடியாது. கோடீன் போன்ற ஓபியாய்டு கலந்த பழக்கத்திற்கு அடிமையாக்கக்கூடிய சிரப்புகள் உட்பட அனைத்து இருமல் சிரப்புகளுக்கும் மருத்துவரின் பரிந்துரை அவசியமாகிறது.
இந்த நடவடிக்கை, இந்தியா மற்றும் பிற நாடுகளில் கலப்பட இருமல் சிரப்புகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க: டெலிகிராமிற்கு தற்காலிக தடை.. நீட் மறுதேர்வுக்கு முன்னதாக அரசு முக்கிய முடிவு.. ஏன் தெரியுமா?
இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் உச்ச ஆலோசனை குழுவான ‘டிரக் கன்சல்டேட்டிவ் கமிட்டி’ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது குழு, “கலப்பட இருமல் சிரப்புகளால் ஏற்பட்ட சமீபத்திய சம்பவங்களை கருத்தில் கொண்டு, ‘ஷெட்யூல் K’-இல் இருமல் சிரப்புகளுக்கு வழங்கப்பட்ட விலக்கு நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்தது.
மருந்து தயாரிப்பில் மூலப்பொருட்கள் மாற்றம்:மேலும், சிரப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ‘புரோப்பிலீன் கிளைக்கால்’ போன்ற துணைப் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமா என்பதையும் குழு ஆய்வு செய்தது. ‘எதிலீன் கிளைக்கால்’ மற்றும் ‘டையெதிலீன் கிளைக்கால்’ போன்ற நச்சுப் பொருட்கள் உருவாக காரணமாக இருப்பது இந்தப் பொருட்களே என கருதப்படுகிறது.
மருத்துவர் பரிந்துரை கட்டாயமாக்கப்பட்டதால், 4 அல்லது 6 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு பொருந்தாத ‘டெக்ஸ்ட்ரோமேதார்பன்’ போன்ற மருந்துகள் தவறுதலாக வழங்கப்படுவதைத் தடுக்க முடியும். இத்தகைய மருந்துகள் குழந்தைகளில் கடுமையான சுவாசக் கோளாறு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவையே உலுக்கிய மத்தியபிரதேச சம்பவம்:மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்புகளுடன் தொடர்புடைய சிரப், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிரப்பில் 48.6% அளவுக்கு நச்சுத்தன்மை கொண்ட டையெதிலீன் கிளைக்கால் (DEG) இருந்தது கண்டறியப்பட்டது. மருந்துகளில் இந்த நச்சுப் பொருளின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு 0.1% மட்டுமே.
2022ஆம் ஆண்டு, காம்பியாவில் 70 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. அவர்கள் அருந்திய சிரப்புகள் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்தவை என கூறப்பட்டது. இதையடுத்து, ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் அனைத்து சிரப்புகளும் மத்திய அல்லது மாநில மருந்து பரிசோதனை ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியது.
மேலும் படிக்க:டெலிகிராமிற்கு தற்காலிக தடை.. நீட் மறுதேர்வுக்கு முன்னதாக அரசு முக்கிய முடிவு.. ஏன் தெரியுமா?
ஆனால், இந்தியாவில் உள்நாட்டில் விற்கப்படும் சிரப்புகளில் கலப்படம் இருப்பதை இந்த நடவடிக்கை முழுமையாகத் தடுக்கவில்லை. மத்தியப் பிரதேச சம்பவம் அதற்குச் சான்றாகும்.
2020ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் ராம்நகர் பகுதியில் குறைந்தது 17 குழந்தைகள், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் சிரப் அருந்தி உயிரிழந்தனர். பின்னர், அந்தச் சிரப்பில் 34.97% டையெதிலீன் கிளைக்கால் இருந்தது கண்டறியப்பட்டது.