அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில், அணுசக்தி விவகாரம் விவாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புதிய சுற்று பேச்சுவார்த்தைகள், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது 19-ம் தேதி சுவிட்சர்லாந்தில் தொடங்கும்.
இந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), வரும் வெள்ளிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படும் என்று அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சர்ச்சைகளை தீர்ப்பதற்கும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி, பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு தாக்குதலோ அல்லது அதன் எந்தவொரு பகுதியை ஆக்கிரமிப்பதோ, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகமாக இருக்கும் வேளையிலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக உலகின் கவனம் அப்பகுதியின் மீது குவிந்திருக்கும் வேளையிலும், அராக்சியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த புதிய பேச்சுவார்த்தை, பல முக்கிய பிரச்னைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கும் இந்த பேச்சுவார்த்தை, சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலப் போக்கையும், நிலையையும் தீர்மானிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா-ஈரான் இடையேயான ஒப்பந்தத்தை உலகமே எதிர்பார்த்துள்ளது. ஏனென்றால், உலகின் பல நாடுகளில் ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை தொடங்கிவிட்டது. அதனால், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி திறக்க வேண்டும் என்பது தான் தற்போது உலக நாடுகளின் வேண்டுதலாக உள்ளது.
ஏற்கனவே, ஹார்முஸில் எண்ணெய்க் கப்பல்கள் சிக்கியுள்ளதால், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்டவைகளின் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றங்களால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஹார்முஸில் கப்பல் போக்குவரத்து சீராகி, எண்ணெய் வர்த்தகம் பழைய நிலைக்கு திரும்ப, சில மாதங்கள் பிடிக்கும் என்று ஏற்கனவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், சிக்கல் அதிகமாகிவிடும். அதனால், நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு எட்டப்பட்டு, அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.